தமிழர் விடுதலைக்கூட்டணி வட கிழக்கில் தனித்துப் போட்டி

 

தம்மிடம் தீர்வு திட்டம் உள்ளதாகவும் அதனை சரியான நேரத்தில் மக்களுக்கு தெரிவிப்போம் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் இடம்பெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த கட்சியின் ஊடக பேச்சாளர் அருண் தம்பிமுத்து இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

‘தமிழர் விடுதலைக்கூட்டணி தாயகப்பிரதேசத்தில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் தனித்து போட்டியிடவுள்ளோம். எம்மோடு இணைந்து செயற்பட்ட அனைவரும் மீண்டும் வர வேண்டும் அதற்காக அனைவரையும் வரவேற்கின்றோம்.

பொருளாதார நெருக்கடியான காலத்திலே உள்ளுராட்சி மன்றங்களை ஒருமித்த கருதோடு சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டிய தேவையுள்ளது. எனவே அனைவரையும் வருவேற்கின்றோம். பல தசாப்தங்களுக்கு பின்னர் ஜனநாயக முறையிலான உள்ளுராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் இந்த கடினமான காலத்திலும் கூட பங்குபெறவேண்டும்.

உள்ளுராட்சி மன்றங்கள் பல கட்சிகளை கொண்டு அமைந்தாலும் கூட மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இது மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அல்ல. உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி தனியாக போட்டியிடப்போகின்றது. ஆனால் அனைவருடனும் இணைந்து வேலை செய்வோம்.

பல சபைகளில் நாங்களே ஆட்சி அமைத்தாலும் கூட அனைவரையம் உள்வாங்கி ஒருமித்து செயற்படுவதுவே நோக்கமாக இருக்கின்றது. தமிழ் கட்சிகள் ஒன்றாக போட்டியிடப்போகின்றது. தனித்தனியாக போட்டியிடப்போகின்றது எல்லாம் அரசியலுக்காக ஒவ்வொரு கட்சிகளும் தமது முடிவுகளை எடுக்கின்றனர்.

நாம் மற்ற கட்சிகளின் முடிவுகளை பற்றி சிந்திக்கவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணிக்கென்று தெளிவான கருத்து இருக்கின்றது.

தெளிவான கொள்கை இருக்கின்றது. நாம் பல வருடங்களின் பின்னர் கட்சியை மீள் கட்டமைத்து முன்சென்றுகொண்டிருக்கின்றோம். எனவே ஏனைய கட்சிகளின் கூட்டணியோடில்லாமல் நாம் தனித்து போட்டியிடுவோம்.

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதனை தெளிவாக கூறி வந்திருக்கின்றோம். வட்டுக்கோட்டை பிரகடனத்தினை உருவாக்கிய கட்சி தமிழர் விடுதலைக்கூட்டணி. சுதந்திரதினத்திற்கு முன் தீர்வை காணுவேன் என ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளது.

தமிழ் கட்சிகளை அழைத்தபோது தமிழர் விடுதலைக்கூட்டணியை அழைக்கவில்லை. பாராளுமன்றத்தில் பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளை மாத்திரமே அழைப்பதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் தமிழர் பிரச்சனை அவ்வாறான விடயம் அல்ல.

கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளை விடுத்து பேச்சு நடத்துவோம் என தெரிவித்தனர்.

அதனால் ஏற்படும் பயன் என்ன என்பதனை மக்கள் அறிந்திருந்தனர். அதனாலேயே பல பேச்சுவார்த்தைகள் அக்காலத்தில் வெற்றி பெறவில்லை. அதைப்போல் பேச்சுக்கு நாம் சிலரை அழைக்கின்றோம். நீங்கள் ஒன்றாக வாருங்கள் என்ற நாடகங்களை நடத்துவது அர்த்தமற்ற செயல்
எம்மிடம் தீர்வு திட்டமும் உள்ளது. அது என்ன என்பதனை சரியான வேளையில் மக்களுக்கு தெரிவிப்போம். அத்துடன் இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம்’ என தெரிவித்தார்.