செயலி (App) ஊடாக பகுதி நேர வாடகை மோட்டார் சைக்கிள் சேவையில் ஈடுபட்டு வந்த 41 வயதுடைய நபர் ஒருவர் ஹோமாகம பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பிட்டிப்பன பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கடந்த 15 ஆம் திகதி மாலை சுமார் 7.00 மணியளவில் பயணியொருவரை ஏற்றிச் செல்லும் வாடகைப் பயணத்திற்காக வீட்டிலிருந்து புறப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அடுத்த நாள் அதிகாலை அவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில் கழுத்து ஆழமாக அறுக்கப்பட்டதால் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கொலை அருகிலுள்ள ஏல விற்பனைக்கான காணியொன்றில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தின் பின்னர், உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கைப்பேசி மற்றும் பணப்பை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து உயிரிழந்தவருக்குச் சொந்தமானதாக நம்பப்படும் ஒரு ஜோடி செருப்பும், 20 ரூபாய் நோட்டொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம நீதவானின் விசாரணை மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் பின்னர், இது திட்டமிட்ட கொலைச் சம்பவம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.