மாவனல்லையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு வாகனப் பயிற்சி வழங்க முற்பட்ட முதியவர், அதே வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அளுத்நுவர வீதியில் உள்ள அளுபத பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த முதியவர் தனது வாகனத்தை ஓட்டி வந்து, தனது வீட்டுக்கு அருகே நிறுத்தியுள்ளார்.
பின்னர், அங்கிருந்த 15 வயது சிறுவனுக்கு வாகனத்தை ஓட்டுவதற்குப் பயிற்சி அளிக்கும் நோக்கில் அவரிடம் வாகனத்தை ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
சிறுவன் வாகனத்தின் சாரதி இருக்கையில் இருந்தபோது, முதியவர் வாகனத்திற்கு முன்னால் நடந்து சென்று வீதியைக் கடக்க முயன்றுள்ளார்.
அந்தச் சமயத்தில் வாகனம் திடீரென முன்னோக்கி நகர்ந்து முதியவர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் உடனடியாக மாவனல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாவனல்லை பகுதியைச் சேர்ந்த 86 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது வாகனத்தை செலுத்திய 15 வயது சிறுவன் தற்போது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளார்.