மட்டக்களப்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்று, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தமைக்காக, அந்த உணவகத்துக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது இந்த விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த உணவகத்தில் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்ட 500 மில்லி லீட்டர் குடிநீர் போத்தல், 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட உணவக நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டது. அதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் அந்த உணவகத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்து, 1977 என்ற எண் மூலம் முறைப்பாடுகளை அளிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.