இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இயந்திர கோளாறு காரணமாக கடலில் பல மணிநேரம் தத்தளித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கப்பல் நேற்று பிற்பகல் 2.30 அளவில் காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டது.
வழக்கமாக நான்கு மணிநேரத்தில் நாகப்பட்டினத்தை அடைய வேண்டிய நிலையில், மோசமான கடல் நிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரவு 10.45 அளவிலேயே கரையை அடைந்தது.
நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் உள்ள கல்லார் பகுதிக்கு அருகே வந்தபோது, கப்பலின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதன்போது கப்பலில் 144 பயணிகள் இருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தகவல் அறிந்த இந்திய அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடலில் தத்தளித்த கப்பல் மெதுவாக இழுத்து வரப்பட்டு துறைமுகத்தைச் சென்றடைந்தது.
கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.