அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்பனை செய்த கடை ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தல்களின்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகும்.
எனினும், குறித்த கடையில் இரண்டு கிலோகிராம் அரிசி 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராமின் விலை 400 ரூபாவாகக் கணக்கிடப்பட்டு, அனுமதிக்கப்பட்ட விலையை விட 140 ரூபா அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனை நடவடிக்கையானது நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
அதிகரிக்கப்பட்ட விலைக்கு அரிசி மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.
பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதன் அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறு நுகர்வோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது போன்ற சட்டவிரோத விற்பனைகள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற துரித இலக்கத்திற்கு (Hotline) உரிய பற்றுச்சீட்டுகளுடன் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.