மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி சந்திவெளி கோரக்களிமடு பகுதியில் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டர் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை சுங்கான்கேணி சேர்ந்த சண்முகதாஸ் அன்புதாஸ் (வயது 22) மற்றும் கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த வடிவேல் தர்மராஜ் (வயது 22) என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி சந்திவெளியில் சந்திவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் சம்பவ தினமான நேற்று இரவு 9 மணியளவில் வீதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்
இதன்போது மோட்டர் சைக்கிள் ஒன்றில் பயணித்த இருவரை பொலிஸார் நிறத்துமாறு சைகைகாட்டிய போது நிறுத்தாது அங்கிருந்து வேகமாக தப்பி ஓடிய போது வீதியில் எதிரே வந்து கொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது
இதில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
கனரக வாகன சாரதியை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.