முன்னாள் இராஜாங்க அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்தவின் சகோதரரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஜகத் சமந்தவிற்கு 5 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரை அச்சுறுத்தியமை, அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, தாக்குதலுக்குள்ளான பிரதேச செயலாளருக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த 10 இலட்சம் ரூபாயைச் செலுத்தத் தவறினால், மேலும் 24 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் சிலாபம் மேல் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இருப்பினும், சனத் நிஷாந்த 2024 ஜனவரி 25 அன்று கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தமையால், இன்று நீதிமன்றத்தில் அவரது சகோதரர் ஜகத் சமந்த மாத்திரமே முன்னிலையாகியிருந்தார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சாட்சியங்கள் மற்றும் விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.