மாதாந்த சபை அமர்வு அறிக்கையை நிறைவேற்ற முடியாமல் போனதால், தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியிலுள்ள ஹட்டன் – டிக்ஓயா நகர சபையின் மாதாந்த அமர்வை வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்க அதன் தவிசாளர் அசோக கருணாரத்ன நடவடிக்கை எடுத்துள்ளார்.
நகர சபை தவிசாளரின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை சபை கூடியதைத் தொடர்ந்து, கடந்த மாதாந்த அமர்வின் அறிக்கை சபையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தச் சந்தர்ப்பத்தில், சபையின் உப தவிசாளர் உட்பட நகர சபை உறுப்பினர்களான அழகமுத்து நந்தகுமார், எஸ்.லோகேஸ்வரன், ஜெய்சான், பிரபாகர் மற்றும் பி.கே. தர்மப்பிரிய ஆகியோர் இந்த மாதாந்த அறிக்கையில் பல்வேறு குறைபாடுகளும் பிழைகளும் காணப்படுவதைச் சுட்டிக்காட்டினர்.
இதற்கு முன்னரும் மாதாந்த சபை அமர்வு அறிக்கைகளில் குறைபாடுகள் இருந்ததாகவும், இவ்வாறான நிலையைத் தொடர அனுமதிக்க முடியாது என்றும் அந்த உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக உறுப்பினர் அழகமுத்து நந்தகுமார் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைய, மாதாந்த அமர்வு ஒரு குழுவாக (Committee) மாற்றப்பட்டு, அறிக்கையிலுள்ள குறைபாடுகள் மற்றும் பிழைகள் குறித்துத் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டது.
அதன் பின்னர், அவரது வேண்டுகோளுக்கு இணங்க, தவிசாளர் உட்பட 15 நகர சபை உறுப்பினர்களும் தனியானதொரு இடத்திற்குச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
அக்கலந்துரையாடலைத் தொடர்ந்து மீண்டும் மாதாந்த அமர்வு ஆரம்பமானது.
இதன்போது, கடந்த மாதாந்த சபை அறிக்கையிலுள்ள குறைபாடுகள் மற்றும் பிழைகள் குறித்த விபரங்களை இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாக வழங்குமாறு தவிசாளர் அசோக கருணாரத்ன அனைத்து நகர சபை உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்தே, மாதாந்த சபை அமர்வு இந்த மாதம் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.