தாயை கொலை செய்து புதைத்த போதைக்கு அடிமையான மகன்

இந்தியாவின் விழுப்புரம் மாவட்டம் முகையூர் அருகில் உள்ள வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்.

பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் வேலை செய்து வந்த சக்திவேலுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். சக்திவேல் மதுவுக்கு அடிமையானதால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி செல்வி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்ற நிலையில் தனது தாய் யசோதாவுடன் சக்திவேல் வசித்து வந்தார்.

இதற்கிடையில், வேலைக்கு செல்லாமல் இருந்த சக்திவேல் குடிப்பதற்காக பணம் கேட்டு தாய் யசோதாவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். மேலும் ஊரில் ஆடு, மாடு என திருட்டிலும் ஈடுபட்டு வந்துள்ளார். சக்திவேலின் குடி பழக்கம் காரணமாக இரவில் வீட்டில் உறங்குவதை தவிர்த்த யசோதா எதிர்வீட்டில் உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவு ஒரு மணியளவில் சக்திவேல் குடிக்க பணம் கேட்டு எதிர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் யசோதாவை அடித்து வீட்டிற்கு இழுத்து சென்றுள்ளார். அங்கு யசோதாவை தலையில் பலமாக தாக்கியதில் அங்கேயே உயிரிழந்துள்ளார். தாய் யசோதாவை சக்திவேல் வீட்டிற்கு பின்புறம் பள்ளம் தோண்டி புதைத்துள்ளார். காலையில் வெகுநேரமாகியும் யசோதாவை காணாமல் அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்திவேல் தப்பியோட முயற்சித்துள்ளார். உடனடியாக பொதுமக்கள் பிடித்து தாக்கி வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அரகண்டநல்லூர் பொலிஸார் புதைக்கப்பட்ட யசோதாவின் உடலை வருவாய்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மது போதையால் குடும்பத்தை இழந்த சக்திவேல் தற்போது தாயையும் அடித்து கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.