இதுவரையில் வரி விலக்களிக்கப்பட்டுவந்த 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு இன்று திங்கட்கிழமை முதல் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளது.
அரச வருமானத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய வற் திருத்தச் சட்டத்துக்கமைய, 15 வீதமாக இருந்த வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மற்றும் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி கட்டணத்தை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.
தீர்மானத்திற்கு அமைய இரண்டாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 80 ரூபா கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக கொழும்பில் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் லலித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் சோற்றுப்பொதி, ப்ரைட் ரைஸ், கொத்துரொட்டி உள்ளிட்ட உணவுகளில் விலையை 25 ரூபாவினாலும், தேநீரின் விலையை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலையை 10 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இதே வேளை, இன்று முதல் நீர் கட்டணமும் 3 சதவீதத்தால் அதிகரிக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பிரதான தொலைபேசி சேவை வழங்குனர்களும் வரி திருத்தத்தின்படி அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.