இந்தியாவில் இருந்து மேலும் 06 மில்லியன் முட்டைகளை ஏற்றிய கப்பல் நாளை ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை நாடு முழுவதிலும் உள்ள சதொச கடைகளுக்கு முட்டைகள் விநியோகிக்கப்படும் என அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
இதேவேளை, VAT தாக்கத்தினால் உற்பத்திச் செலவு அதிகரிக்காது போனால், அடுத்த சில மாதங்களில் உள்ளுர் சந்தையில் 30 முதல் 35 ரூபாவிற்குள் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது பெய்து வரும் மழையினால் மரக்கறி பயிர்கள் நாசமடைந்துள்ளதால் விலை மேலும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 700 ரூபாவாகவும், பீன்ஸ் ஒரு கிலோ மொத்த விற்பனை விலை 500 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 400 ரூபாயாகவும், பச்சை மிளகாய் ஒரு கிலோ மொத்த விற்பனை 1200 ரூபாயாகவும் இருந்தது.
தமது வியாபார அனுபவத்திற்கேற்ப இந்தளவு விலை அதிகரிப்பது இதுவே முதல் முறை என மரக்கறி வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் காய்கறிகள் வாங்க வாடிக்கையாளர்கள் வருவதில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.