இந்தியாவின் பெங்களூரில் சேர்ந்து எடுத்த புகைபடங்களை காட்டி மிரட்டி முன்னாள் காதலியை 6 மாதமாக நடன ஆசிரியர் 2 நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த குற்ற சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் கொடிகேஹள்ளி பகுதியை சேர்ந்த அன்டி ஜார்ஜ் (வயது – 28) என்ற நடன ஆசிரியருக்கும் 23 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் இடையிடையே சமூக வலைதளங்களில் நலம்விசாரித்து கொண்டனர். இந்த நலம் விசாரிப்பு அவர்கள் இடையேயான உறவை வலுப்படுத்தியது. இதையடுத்து இருவரும் தொலைபேசி எண்களை பரிமாறி கொண்டு பேச தொடங்கினர்.
இருவரும் நல்ல நண்பர்களாக மாறினர். மேலும் அவர்கள் 2 பேரும் அடிக்கடி பெங்களூரில் சேர்ந்து சுற்ற தொடங்கினர். இருவருக்கும் இடையேயான இந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் பரஸ்பரம் காதலிக்க தொடங்கினர். இதை தொடர்ந்து அடிக்கடி அவர்கள் 2 பேரும் வெளியே சென்று தொலைபேசியில் புகைபடங்கள் எடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு அன்டி ஜார்ஜ், இளம்பெண் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவர் இடையேயான காதல் முறிந்து இருவரும் காதலை கைவிட்டு பிரிந்தனர். இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அன்டி ஜார்ஜ், தனது முன்னாள் காதலியாக இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதன் போது ‛‛காதலித்த சமயத்தில் எடுத்த புகைபடங்கள் என்னிடம் உள்ளது. எனது ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த புகைபடங்களை வெளியிட்டு விடுவேன்” என மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு, ‛‛எனது ஆசைக்கு இணங்கிவிட்டால் புகைபடங்களை அழித்து விடுவேன்” என தெரிவித்துள்ளார். இதனால் இளம்பெண் செய்வதறியாது திகைத்தார். மேலும் அன்டி ஜார்ஜ் ஆசைக்கு அவர் இணங்கவில்லை.
இருப்பினும் அன்டி ஜார்ஜ் விடவில்லை. தொடர்ந்து மிரட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். அதோடு அன்டி ஜார்ஜ் தனது நண்பர்கள் சந்தோஷ் (வயது – 28), சசிக்குமார் (வயது – 30) ஆகியோரையும் சேர்த்து கொண்டு இளம்பெண்ணை வன்புணர்வு செய்துள்ளார். இந்த தொல்லை தொடர்ந்து வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான இளம்பெண் சம்பவம் குறித்து தனது தோழியிடம் தெரிவித்தார்.அப்போது குறித்த பெண் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடும் படி அறிவுறுத்தினார்.
பின்னர் கொடுமை தாங்க முடியாத குறித்த பெண் சம்பவம் குறித்து பொலிஸில் புகார் செய்தார். அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து அன்டி ஜார்ஜ், சந்தோஷ், சசிக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களுள் அன்டி ஜார்ஜுக்கு திருமணம் ஆகவில்லை சந்தோஷ், சசிக்குமார் ஆகியோர் திருமணம் ஆனவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து தொலைபேசி, மடிக்கணினி, பென் டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.