-திருகோணமலை நிருபர்-
30 ஏக்கர் காணியை கம்பனிக்கு வழங்க வேண்டாம் திருகோணமலை வில்கம் விகாரை மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை-வில்கம் விகாரை வனப்பகுதியிலுள்ள காணிப்பகுதியினை ஆக்கிரமிப்பு செய்தமைக்கு எதிராக அப்பகுதியிலுள்ள மக்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த போராட்டம் நேற்றுடன் தொடர்ச்சியாக 5வது நாளாகவும் தொடர்கிறது.
உண்ணாவிரதப் போராட்டமானது ஆரம்பிக்கப்பட்டு 5வது நாளாகவும் தொடரும் நிலையில் இதுவரை எந்த ஒரு அரச அதிகாரிகளும் கவனம் செலுத்தாத நிலையில் திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியினை மறித்து மக்கள் நேற்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்த உப்புவெளி பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடுவதற்கு ஆவணை செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அவ்வீதியூடான போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் போராட்டமானது தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
வில்கம் விகாரை வனப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு அங்கு 30 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி கையகப்படுத்தப்படுவதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பாக அரச மட்டங்களுக்கு அறிவித்திருந்தபோதிலும் இதுவரை அதற்கான பதில் கிடைக்காததால் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பல வருட காலங்களாக அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு இன்னமும் காணித் துண்டுகள் அரசினால் வழங்கப்படாத நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து வருகின்ற செல்வந்தர்களுக்கு வனப்பகுதியிலுள்ள காணிகள் என்பன தாரை வார்க்கப்படுவதாகவும் இதன் காரணமாக தம்மால் பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
