3 வருடங்கள் கடந்தும் பூர்த்தி செய்யப்படாத பாலம்: மக்கள் விசனம்

-கிண்ணியா நிருபர்-

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூவரசந்தீவையும் – கல்லடி வெட்டு வானையும் இணைக்கும் வடசல்பாலம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இதனால் அப்பிரதேச மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக் கடந்த 2021.10.16 ஆம் திகதி அன்று இப்பாலத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

ஆறு மாதத்துக்குள் முடித்து தருவேன் என மக்களிடம் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் இன்னும் அவை நிறைவேற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இப் பகுதியில் உள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த பாலத்தினூடாக பயணம் செய்து வருகின்றதுடன் விவசாயம், சிறு மீன்பிடி தொழில் என பல முக்கிய அன்றாட ஜீவனோபாயத்துக்காக இவ் ஆற்றை கடந்தே செல்ல வேண்டியுள்ளது.

இதேவேளை மூன்று வருடங்கள் கடந்து நான்காவது வருடம் ஆரம்பித்த போதிலும் மக்கள் போக்குவரத்து செய்வதற்கு ஏற்ற வகையில் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை எனவும் இதனை பூரணமாக்கி வீதியை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பாலத்தின் சில பகுதிகள் முடிவடைந்த போதிலும் இரு புறத்திலும் உள்ள வீதிகள் செப்பணிடப்படவில்லை, பாடசாலை மாணவர்கள் வியாபாரிகள், கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளிகள் உட்பட பலரும் இப்பாலும் செப்பனிடப்படாததனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பாலத்தை செப்பணிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்