கொழும்பு – முல்லேரியாவ பொலிஸ் பிரிவின் உடுமுல்ல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியாவ பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை பொலிஸாரால் நாடு முழுவதும் குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 2 கிலோகிராம் 218 கிராம் ஹெராயின், 667, 000 ரூபாய் பணம், மூன்று மொபைல் போன்கள் மற்றும் போதைப்பொருள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரின் வழிகாட்டுதலின் கீழ் சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.