2026ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் வரவு மற்றும் செலவுகளை அங்கீகரிப்பதற்கான உத்தேச பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதீடு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 இற்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
இதற்கமைய, பாதீடு தொடர்பான விவாதம் நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை 23 நாட்கள் நடைபெறவுள்ளன.
இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நாளை முதல் எதிர்வரும் 14 வரை வரை இடம்பெற்று, அன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறும்.
அத்துடன், குழுநிலை விவாதம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெற்று அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்து சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் விவாதம் இடம்பெறும்.
அத்துடன், குழுநிலை விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் திங்கட்கிழமைகளில் முற்பகல் 9.30 இருக்கும், ஏனைய நாட்களில் முற்பகல் 9 மணிக்கும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது பாதீடானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதத்திற்கும் குறைந்த அரசாங்க செலவினங்களை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், 2026ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டின் மொத்த வருமானம் மற்றும் மானியம் 15.1 சதவீதமாகவும், மொத்த செலவு 21.8 சதவீதமாகவும் இருக்குமென அரசாங்கத்தினால் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கல்வி, சுகாதாரம், தேசிய மற்றும் சமூக பாதுகாப்பு என்பவற்றுக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
2026ஆம் ஆண்டுக்கான பாதீடு சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்த நிதி ஒழுக்கத்தைப் பேணுவதில் நுட்பமான சமநிலையை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
அதேநேரத்தில் கடந்தகால பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திட்டங்களையும் நிவாரணங்களையும் இந்த பாதீட்டில் வழங்க வேண்டியுள்ளது.
இதன்படி தங்களது வாழ்க்கைச் செலவை குறைத்து வளமான வாழ்வை ஏற்படுத்தும் வகையிலே இந்த பாதீடு அமைய வேண்டுமென்பது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
மக்களின் எதிர்பார்ப்பை ஈடேற்றும் வகையில் 2026ஆம் நிதியாண்டுக்கான பாதீடு அமையுமா? என்பதை இன்றைய நாள் இறுதிக்குள் அவதானிக்கலாம்.