பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை செம்மஞ்சள் (Orange) நிற ஆடைகளை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதற்கான ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் அற்ற பிரகாசமான எதிர்காலத்தின் அடையாளமாக ஆரஞ்சு நிறம் கருதப்படுவதுடன், பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் இந்நிறம் பயன்படுத்தப்படுகிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் குறித்தும் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டு பிரசாரத்தின் ஒரு பகுதியாக, இலங்கை நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கான ஒன்றியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பேரணியையும் ஏற்பாடு செய்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான இந்த ஒன்றியத்தினால், ‘இது எனது உரிமை’ என்ற தொனிப்பொருளில் குறித்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் 10ஆம் திகதி மனித உரிமைகள் தினத்துடன் இந்த 16 நாட்கள் பிரசாரம் நிறைவடைகிறது.
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைக்கான அலுவலகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்களின்படி, உலகளவில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைக்கு முகங்கொடுக்கின்றார். பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளின் அவசியத்தை இந்தப் புள்ளிவிபரம் எடுத்துக்காட்டுகிறது.










