2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று புதன்கிழமை முன்னெடுத்துள்ள ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பு காரணமாக, பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெறவிருந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், விரிவுரைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பணிப்புறக்கணிப்பு, கடந்த ஒரு வாரத்திற்குள் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் இரண்டாவது தொழிற்சங்க நடவடிக்கையாகும்.
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகக் குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பளங்கள், மேலதிக நேரக் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீள வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இன்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கக் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார். அத்துடன், ஒன்பது பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தனது முதலாவது வரவு செலவுத் திட்டம் முதல் பல்கலைக்கழக சமூகத்தின் உரிமைகளைத் தொடர்ச்சியாகக் குறைத்து வருவதாகவும், முன்னைய பேச்சுவார்த்தைகளின்போது இணக்கம் காணப்பட்ட திருத்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதாகவும் தம்மிக்க எஸ். பிரியந்த குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, பல்கலைக்கழகக் கட்டமைப்பில் மேலும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் சில நாட்களுக்குள் தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முழு அரச சேவையையும் உள்ளடக்கிய பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இந்தப் பணிப்புறக்கணிப்பில் இணைந்துகொள்ளவுள்ளதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களும் ஏற்கனவே அறிவித்துள்ளன.










