கிளிநொச்சியில் பதினான்கு வயதுடைய சிறுமியை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய தந்தைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் நேற்று புதன் கிழமை விதிக்கப்பட்டுள்ளது.
70 வயதுடைய சிறுமியின் தந்தையே இவ்வாறு குற்றவாளியாக இனம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் வைத்தும் அதன் பின்னரும் மகளை அடித்து துன்புறுத்தியும் தடியினால் தாக்கியும் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார் என சிறுமியின் வாக்கு மூல சாட்சியங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை போன்ற ஆதாரங்கள் மூலம் நீதிமன்று குறித்த முதியவரை குற்றவாளியாக இனம் கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.
குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலதிகமாக 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உடல், உள ரீதியாகவும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதனால் குறித்த சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபா இழப்பீட்டினை வழங்குமாறும் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.