-யாழ் நிருபர்-
எல்லை தாண்டி யாழ்ப்பாணம் – காரைநகர் – கோவளம் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை இரவு இலங்கை கடற்படையினரால், படகுடன் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுயாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் அவர்கள் 14பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார். இந்நிலையில் 12 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இரு மீனவர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.