மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு இன்றைய தினம் திங்கட்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின்போது இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த கடந்த 09.22 அன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தீர்ப்புக்காக இன்று திங்கட்கிழமை எடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.
மகாவலி அதிகார சபை சார்பாக மன்றுக்கு அரச சட்டத்தரணி டில்கானி டி சில்வா ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில் அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எந்த வகையான ஆவணமும் நீதிமன்றுக்கு அத்துமீறி குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களினால் சமர்ப்பிக்கப்படாததால் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய குறித்த 13 பேரையும் வெளியேறுமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.
