மீகொடவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் வாகனத்துடன், ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே, மீகொட பொலிஸார், அந்த வாகனம் குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் அளித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
சந்தேக நபர், வாகனத்துடன், நேற்று பிற்பகல் தலங்கமவில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் 10.600 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகனத்தை மேலும் சோதனை செய்ததில், ஒரு கைத்துப்பாக்கி, 14 தோட்டாக்கள், 08 மொபைல் போன்கள் மற்றும் 04 ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளையைச் சேர்ந்த 30 வயதுடையவர். தலங்கம மற்றும் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் நிலம் கையகப்படுத்துதல், விற்பனை மற்றும் கட்டுமான தொழிலில் ஈடுபட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன்னதாக மீகொடை பொலிஸாரிடம் சென்று நிலத்தகராறு தொடர்பில் ஏற்பட்ட மோதல் குறித்து முறைப்பாடளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட நபர் ககன என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் மைத்துனர் என்றும் கூறப்படுகிறது.
லலித் கன்னங்கர என்பவர் பாஸ் லலித் என்ற பெயரைப் பயன்படுத்தி பல்வேறு நபர்களிடமிருந்து பணம் பறித்ததாகவும், அதற்குப் பழிவாங்கும் விதமாக பாஸ் லலித் இந்தக் கொலையைத் திட்டமிட்டதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
லலித் கன்னங்கர என்ற நபர் ஹங்வெல்ல, ஹோமாகம, மீகொட, அத்துருகிரிய, பத்தரமுல்லை, தலவத்துகொட மற்றும் பிற பகுதிகளில் நிலம் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுள்ள சில தொழிலதிபர்களிடமிருந்து கப்பம் பெறுதல் மற்றும் பலவந்தமாக நிலத்தினை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அத்துடன் தலவத்துகொடை பகுதியிலுள்ள பொலிஸ் ஆய்வாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டேல் குணரத்னவின் குடும்பத்திற்குச் சொந்தமான 2 நிலங்களை லலித் கன்னங்கர தலைமையிலான கும்பல் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்த முயன்றதாகவும் சமீபத்தில் தெரியவந்துள்ளது.
மேலும் சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பால் லலித் கன்னங்கரவுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
லலித் கன்னங்கர 2 சந்தர்ப்பங்களில் துபாய் மற்றும் அபுதாபியில் பொலிஸாரிடம் பிடிபட்டிருந்தாலும், அந்த நாடுகள் அவரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு நாடு கடத்தாமல் விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 78 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 43 பேர் உயிரிழந்ததுடன் 47 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.