விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான நடுன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக்கட்டாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல்வேறு வரப்பிரசாதங்களைப் பெற்றதாகக் கூறப்படும் 19 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் உத்தரவின் பேரில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானவர்கள் தென் மாகாணத்தில் உள்ள பல்வேறு நிலைகளில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஹரக்கட்டா பொலிஸாரால் எதிர்பாராதவிதமாக கைது செய்யப்பட்டதையடுத்து, சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணிக்காலம் முடிவதற்குள் பல்வேறு காரணங்களை கூறி தாமாக முன்வந்து கடினமான பகுதிக்கு இடமாற்றம் செய்து சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.