இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் தனது மகள் வேறு ஜாதியை சேர்ந்த இளைஞனை காதலித்ததால் கோபமடைந்த தந்தை மகளை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
பிடலூர் கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் என்பவரே தனது மகளான 20 வயதுடைய கல்லூரி மாணவி கவானாவை கொலை செய்துள்ளார்.
கவானா இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்து வந்துள்ளார். இதனை அறிந்த மஞ்சுநாத் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளின் காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதை அறிந்ததும் மஞ்சுநாத்தின் கோபம் மேலும் அதிகரித்தது.
பலமுறை காதலை கைவிடும்படி மகளை எச்சரித்துள்ளார். ஆனால் தந்தை சொன்னதை கேட்காத கவானா, காதலை கைவிட முடியாது என்றும், அந்த இளைஞரைதான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் பிடிவாதமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை இரவும் காதல் விவகாரம் தொடர்பாக தந்தைக்கும் மகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், கத்தியால் மகளின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் கை மற்றும் கால்களில் பலமுறை வெறி தீர கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் மகள் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட மஞ்சுநாத் அருகில் உள்ள விஸ்வநாதபுரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.