பிரிட்டிஷ் பெண்ணொருவரின் வங்கி அட்டையை திருடி ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேகநபர் ஹட்டன் பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற ரயிலில் பயணித்த பிரிட்டிஷ் பெண்ணின் வங்கி அட்டையை, ஹட்டன் மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்தே இவர் திருடியுள்ளார்.
மேலும் ஹட்டன் நகரில் தங்கை நகை, தொலைபேசி, ஆடை உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்துள்ளார்.
தங்கை நகையை ஹட்டனிலுள்ள தனியார் அடகு பிடிக்கும் நிலையமொன்றில் அடகு வைத்து 78 ஆயிரம் ரூபா பெற்றுள்ளார்.
இதேவேளை தனது வங்கி அட்டை களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் எல்ல சுற்றுலாப் பொலிஸாரிடம் குறித்த பெண் முறையிட்டுள்ளார். இதனையடுத்து அது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார், வாடகை வாகனமொன்றில் எல்ல நோக்கி பயணமாக தயாராகிக்கொண்டிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். களவாடிய வங்கி அட்டையில் இருந்து வாங்கிய பொருட்களையும் மீட்டனர்.
பிரிட்டிஷ் பெண்ணை ஹட்டன் வரவழைத்து, வங்கி அட்டை வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் கடைகளில் வாங்கிய பொருட்கள் மீள வழங்கப்பட்டு அதற்குரிய பணமும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.