-பதுளை நிருபர்-
ஹப்புத்தளை, தபேதென்ன கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தபேதென்ன கிராம பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் நுழைந்த காட்டு யானைகள் தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் 0.5 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டிருந்த லீக்ஸ், கீரைவகைகள் போன்ற காய்கறிகள் மற்றும் வாழை மரங்கள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
புனாகலை வனப்பகுதியிலிருந்து இந்த காட்டு யானைகள் தங்கள் கிராமங்களுக்குள் வந்து பயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகக் கூறும் அப்பகுதி மக்கள், அவற்றை குறித்த வனப்பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.