இனந்தெரியாத குழுவினரால் விமானப்படை சிப்பாய் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் இலங்கை விமானப்படை தெளிவுபடுத்தியுள்ளது.
மட்டக்களப்பு விமானப்படை தளத்தில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் நேற்று வியாழக்கிழமை காலை வாழைச்சேனை, ரிதிதென்ன பிரதேசத்தில் மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட போது பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த இடத்தில் தமிழில் எழுதப்பட்ட பதாதை ஒன்றும் காணப்பட்டதாகவும், ‘கொடூர அரசியலுக்கு உதவுபவர்களுக்கு இப்படித்தான் மரணம்’ என்று அதில் எழுதப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வாழைச்சேனை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அதில் விடுமுறைக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த தன்னை வேனில் இருந்து கடத்திச் சென்று மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்ய முயற்சித்ததாக குறித்த சிப்பாய் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த தகவலிலும், விசாரணையில் வெளியான தகவல்களிலும் உள்ள முரண்பாடுகளாலும், அடுத்ததாக தமிழில் எழுதப்பட்ட பலகை குறித்தும் சந்தேகம் எழுந்ததாலும், இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள், தமிழ் அறிவு இல்லாதவர் எழுதியது என கண்டு பிடித்தனர்.
மேலும் விசாரணையை தொடர்ந்த போது, அவரே இந்த செயலை செய்துள்ளார் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விமானப்படை சிப்பாய் இணைய கம்ப்யூட்டர் கேமிங்கிற்கு அதிக அடிமையாகி இருப்பதாகவும், அதில் ஈடுபடுவதற்காக தனது தளத்தில் உள்ள சக விமானப்படை வீரர்களிடம் பணம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பணத்தை திருப்பித் தராததால் தற்கொலை செய்து கொள்ள எண்ணியதாக அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டால் விமானப்படையின் பலன்களை மனைவி பெறமுடியாது என்பதற்காகவே இந்த செயலை திட்டமிட்டு செய்ததாக தெரியவந்துள்ளது.
தற்போது வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த சிப்பாய் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த நடவடிக்கையுடன் இலங்கை விமானப்படை அல்லது வேறு எந்த தரப்பினருக்கும் எந்த தொடர்பும் இல்லை, இந்த முழு செயல்முறையும் குறித்த சிப்பாய் தனது விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படை வலியுறுத்துகிறது.
இலங்கை விமானப்படைக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, விமானப்படை சட்டத்தின்படி பொலிஸ் விசாரணையின் முடிவில் குறித்த சிப்பாய் சட்டரீதியாக கையாளப்பட உள்ளார் என விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
