விதை உருளை கிழங்குகள் தொடர்பில் விசாரணை

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளை கிழங்குகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வித தரச் சான்றிதழும் இன்றி குப்பிளான் களஞ்சியசாலைக்கு விதை உருளை கிழங்குகள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன, அதற்கான அனுமதியை வழங்கியது யார்? தற்போது அவற்றை அழிப்பதற்குரிய செலவுகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மாற்று செயற்பாடுகள் போன்ற பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆளுநரால் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் விதை உருளைகிழங்கு இறக்குமதியில் மோசடிகள் இடம்பெற்றிருக்க கூடும் என்பதால் அது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தீர்மானத்திற்கு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகளில் ஏற்பட்ட பக்டீரியா தாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை, விவசாய அமைச்சரிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

குறித்த ஆய்வறிக்கையை உடனடியாக கையளிக்குமாறு, விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர விவசாய பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதற்கமைய, கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று சென்று யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்குகள் தொடர்பில் ஆராய்ந்து, அதன் அறிக்கையை கையளித்துள்ளது.

இதன்போது, உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கப்பெற்ற 21 மெற்ரிக் டன் விதை உருளைக்கிழங்குகளில் பக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டிருந்தது.

அதேநேரம் உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமையினால் அதில் 40 சதவீத உருளைக்கிழங்குகளில் முற்றிலுமாக பக்டீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்ப்பதற்கு, பக்டீரியா தாக்கம் ஏற்பட்ட விதை உருளைக்கிழங்குகளை உடனடியாக அழிப்பதற்கு அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விதை உருளைக்கிழங்குகள் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.