பொலன்னறுவை, திம்புலாகலை, வெலிகந்த, மகாவலி போன்ற பிரதேசங்களில் இரண்டு நாட்களாக காலையில் வானத்தில் இருந்து விழும் ஒரு வித்தியாசமான மர்மப் பொருளினால் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருவதோடு அவற்றில் ஒரு சிலவற்றை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மர்மப் பொருளினால் நேற்றுமுன் தினம் செவ்வாய் கிழமை பொலன்னறுவை, ஜயந்திபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று புதன் கிழமை காலை திம்புலாகல, நுவரகல, யக்வெவ, யக்குரே, மனம்பிட்டிய, சிறிபுர போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், வெலிகந்த நெலும்வெவ, மதுரங்கல உள்ளிட்ட அண்டை கிராமங்களிலும் இந்த வெள்ளைப் பொருட்கள் விழுவதை மக்கள் அவதானித்துள்ளனர்.
மேலும், இவை காலை வேளையில் பொலன்னறுவை பிரதேசத்தில் பெருமளவில் விழுவதுடன், அப்பகுதியில் உள்ள மின் கம்பிகள் மற்றும் செடிகளில் சிக்கி இருப்பதாகவும் எனினும் இந்த வெள்ளைப் பொருட்கள் சில நொடிகளில் கரைந்துவிடும் என பொலன்னறுவை உள்ளிட்ட அண்டை கிராமங்களில் உள்ள விவசாயிகள் கூறியுள்ளனர்.