புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் சிறம்பையடி இரண்டாம் கட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் தப்போவ மஹாகொன்வெவ பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மோட்டார் சைக்கிள் சாரதியே இதன்போது உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கார் மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் கார் மோதுண்டு விபத்துக்குள்ளாகி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காரின் சாரதி குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


