வவுனியா, தோணிக்கல் இரட்டைக்கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை ஆள் அடையாள அணி வகுப்பிற்காக தயார்படுத்தப்பட்டபோதும் சாட்சி உடல்நிலை சீரின்மையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனால் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் மீண்டும் 24 திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் அதுவரையில் வவுனியா சிறைச்சாலையில் சந்தேக நபர்களை தடுத்து வைக்கவும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.
1ஆம் சந்தேகநபர் சிறு நோய்களுக்கு உட்பட்டவர் என்பதனால் சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவில்லை. எனினும் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களில் ஐவரை வவுனியா மாவட்ட சிறைச்சாலை உத்தியோகத்தினர் மன்றில் முன்னிலைப்படுத்தினர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் சந்தேகநபர்களின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும், சந்தேகநபர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.