பிரான்ஸ்க்கு செல்வதற்காக இருபது இலட்சம் ரூபாய் பணத்தை வெளிநாடொன்றில் உள்ள போலி முகவரிடம் கையளித்து ஏமாந்து போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூதாட்டி தற்போது லெபனான் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலணை மேற்கு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சரஸ்வதி என்கிற 64 வயதான மூதாட்டி லெபனான் சிறையில் உள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று லெபனான் ஊடாக பிரான்ஸ் செல்வதற்காக இருந்த போது உரிய ஆவணங்கள் இல்லை என்பதற்காக கைது செய்யப்பட்டு லெபனான் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் இருந்து கடந்த ஜூன் மாதம் புறப்பட்டார். ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் லெபனான் நாட்டின் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“லெபனான் அருகில் உள்ள இஸ்ரேல் நாட்டில் யுத்தம் இடம்பெறுவதால் எமக்கு பயமாக உள்ளது. எமது அம்மா சுகவீனம் அடைந்துள்ளார்.எமது அம்மாவை நாட்டுக்கு கொண்டுவர உரிய தரப்புக்கள் உதவ வேண்டும்”என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.