இந்தியாவில் ரீல்ஸ் செய்ய வேண்டாம் என கண்டித்த கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த மகேஷ்வர் குமார் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொல்கத்தாவில் கூலி வேலை செய்து வந்துள்ளதுடன் இவருக்கும் ராணி குமாரி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில், கொல்கத்தாவில் வேலை செய்து வந்த மகேஷ்வர் குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகாருக்கு வந்திருந்தார். இவரது மனைவி ராணி குமாரி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை ரீல்ஸ் செய்யும் போது கணவர் மகேஷ்வர்குமார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தொடர்ந்ததால், மனைவி ராணி குமாரி ஆத்திரத்தில் கணவர் மகேஷ்குமாரின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.
மகேஷ்வர் குமாரின் சகோதரர் கொல்கத்தாவில் இருந்து இரவு தொலைபேசியில் அழைப்பு விடுத்தபோது வேறொருவர் பேசியதால் சந்தேகமடைந்த மகேஷ்வர்குமாரின் அண்ணன், தந்தையிடம் நேரில் சென்று பார்க்கச் சொன்னதையடுத்து, தந்தையும் சென்று பார்த்தபோது மகேஷ்வர் குமார் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் தந்தை பொலிஸ்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உயிரிழந்த மகேஷ்வர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து, வழக்குப்பதிவு செய்த பொலிஸார், மனைவி ராணி குமாரி மற்றும் அவரது தாயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.