-யாழ் நிருபர்-
வடக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ளே இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை காலை 9.00 மணிமுதல் மேற்கொண்டனர்.
இதன்போது, ‘ஊடக அடக்குமுறை, தேசிய கொள்கைகளை அழித்து ஆக்கிரமிப்பில் ஆட்சி செய்கின்ற அரசே மக்கள் அபிப்பிராயத்திற்கு தலை வணங்கவும், சுகாதாரத் துறையை தனியார் மயப்படுத்துவதை தடுத்து நிறுத்துவோம், அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியவசியமான மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகிறது மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன, மின்சாரம் இல்லை, மருந்து இல்லை பொறுப்பேற்க எந்த ஒரு அரசும் இல்லை, இலவச சுகாதார மையத்தில் அனைவரது உயிர்கள் ஆபத்தில் உள்ளன, அனைவருக்கும் ஒரே சட்டத்தை நிலைநாட்டவும், முறையற்ற நிதி மேலாண்மை நாம் மக்களின் உயிர்களை தியாகம் செய்கின்றோமா, பணவீக்கத்திற்கு சமமான வருமானத்தை உறுதி செய்வோம், அரசின் அடக்குமுறையை இல்லாது ஒழிப்போம்’ என்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஐந்து மாவட்டத்தினதும் பிரதிநிதிகள், யாழ் போதனா வைத்தியசாலையில் தாதியர்கள், யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்ததோடு, பொதுமக்களுக்கான துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது, வைத்தியசாலை வளாகத்துக்குள் புலனாய்வுப் பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.