யாழில் பொருட்களை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் பொலிஸாரிடம் சிக்கினார்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டளைக்கு அமைவாகவும், மாவட்ட பொறுப்பதிகாரியின் பணிப்பிற்கு அமைவாகவும், பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரால் நேற்று வெள்ளிக்கிழமை களப் பரிசீலனை செய்யப்பட்டது.

இத் திடீர் பரிசீலனையின் போது வர்த்தக நிலையத்தில் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிவாயு பொலிஸாரின் உதவியுடன் கைப்பற்றப்பட்டு சரியான விலைக்கு பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அவ் வர்த்தகருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

மேலும், இவ்வாறாக எரிவாயுவினை அதிகூடிய விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என்பதனை வர்த்தகர்களுக்கு பாவனையாளர் அதிகார சபை தெரிவித்துள்ளது.