நாட்டில், இந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் திகதி வரை யானை – மனித மோதலால் 94 பேரும், 238 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
தரவுகளின் அடிப்படையில், அநுராதபுர மாவட்டத்திலேயே அதிகளவான யானைகள் உயிரிழந்துள்ளதுடன் பெரும்பாலான யானைகள் மின்சாரம் தாக்கியதாலும், துப்பாக்கி சூட்டினாலும் உயிரிழப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி 74 யானைகள் இனங்காணப்படாத காரணங்களால் உயிரிழந்துள்ளதாகவும், 49 யானைகள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகவும், 36 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இதுவரையான காலப்பகுதியில் யானை – மனித மோதல் காரணமாக 146 பேரும், 439 யானைகளும் உயிரிழந்ததாகவும் இது இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டின் 80 சதவீத நிலம் அரசுக்குரியது. 20 சதவீத நிலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சனத்தொகை அதிகரிப்பால் மக்கள் தமது அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நீர்ப்பாசன செயற்பாடுகளின்போது யானைகளின் வாழ்விடங்களும் அவை பயணிக்கும் வழிகளும் பாதிக்கப்படைகின்றன. இதுவே யானை – மனித மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், யானை – மனித மோதலைத் தடுக்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் எனவும் குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தின் ஊடாக இதற்கான தீர்வுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.