-பதுளை நிருபர்-
கோனகனார பொலிஸ் எல்லைக்குட்பட்ட கொங்கெட்டிய 15 கட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக கோனகனார பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தல 15 கட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண், வயலில் நெல் அறுத்துக் கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
எனினும் குறித்த பெண்ணை நோக்கி யானை வருவதை அவதானித்த சிலர் காட்டு யானை வருவதாகக் கூறி சத்தம் போட்டதாகவும், ஆனால் உயிரிழந்த பெண்ணுக்கு செவித்திறன் குறைபாடு இருந்ததாகவும் அதனால் அவர்களின் சத்தம் அவருக்கு கேட்கவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கோனகனார பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.