யானை உயிரிழப்பு : விசாரணைகள் தீவிரம்!
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- எத்தாபெந்திவெவ வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்ததை தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
25 வயது மதிக்கத்தக்க 7 அடி நீளமான கொம்பன் யானையொன்றே உயிரிழந்துள்ளது.
கடந்த வாரங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வந்தமையும், ஊருக்குள் புகுந்து வீடுகளையும் வீட்டு தோட்டங்களையும் சேதப்படுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் பலர் முறைப்பாடு செய்திருந்தனர்.
இருந்த போதிலும் யானையின் வாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், யானை உயிரிழந்தமை தொடர்பில் திருகோணமலை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் வன விலங்கு அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
யானை மரணித்தமை தொடர்பாக மிருக வைத்திய நிபுணர் சம்பவ இடத்திற்கு நாளை வியாழக்கிழமை வருகை தர உள்ளதுடன் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் வனவிலங்கு திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
அத்துடன் மொறவெவ பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.