கற்பிட்டி – நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக வியாழக்கிழமை (19) இரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஐந்து வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
கற்பிட்டி – தலவில பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
உயிரிழந்த ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது கற்பிட்டி பகுதியிலிருந்து பாலாவியை நோக்கிப் பயணித்த மகேந்திர ரக லொறியொன்றும், எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த சிறுவன் உட்பட மூவரையும் சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போது, காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானதாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் சாரதி, முறையற்ற வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற விதம் பற்றி வீதியோரத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராவிலும் பதிவாகியுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சுனில் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.