முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்கிறார்?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை வியாழக்கிழமை சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக ரோய்ட்டர்ஸ் (Reuters) செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையடுத்து, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கையகப்படுத்தியதால் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 14ஆம்திகதி மாலைத்தீவு வழியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூருக்கு சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரை விட்டு வெளியேறி தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கிற்கு வியாழக்கிழமை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு தகவல் வட்டாரங்கள் தெரிவித்ததாக ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கோரிக்கைகளுக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உடனடியாக பதிலளிக்கவில்லை என்றும், தாய்லாந்து அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரட்சடா தனடிரெக்  இது குறித்து ரோய்ட்டர்ஸிடம் கருத்துவெளியிட மறுத்துவிட்டதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை விட்டு வெளியேறியதில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுத் வெளியில் தோன்றவோ கருத்துக்களை தெரிவிக்கவோ இல்லை.

மேலும், தாம் அவருக்கு எந்த சலுகைகளையும் விலக்குகளையும் வழங்கவில்லை என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்தது.

எவ்வாறாயினும், சிங்கப்பூரில் அவருக்கு நாளை வரை (ஆகஸ்ட் 11) குறுங்கால பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதி காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் தாய்லாந்து செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி, எதிர்காலத்தில் இலங்கைக்கு திரும்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்பு குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஜூலை 31 அன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு அளித்த பேட்டியில், ‘அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று தான் நம்பவில்லை’ என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், கோட்டாப ராஜபக்ஷ இலங்கை திரும்பினால், அவருக்கு எதிராக ஏதேனும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டால், அவருக்கு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கிடைக்காது என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.