இந்தியாவில் பரவிவரும் புதிய கொவிட் மாறுபாடு JN.1 இன் தோற்றம் தொடர்பான நிலைமையை சுகாதார அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், தற்போது வரை நடத்தப்பட்ட மாதிரி பரிசோதனைகளில் எந்தவொரு நோய் நிலமைகளும் நாட்டில் பதிவாகவில்லை என தெரிவித்தார்.
இருந்த போதிலும், முந்தைய கொவிட் காலங்களில் ஏற்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு அமைச்சர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், நாடு பூராகவும் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பத்திரன அறிவித்தார்.
இந்த வேலைத்திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவித்த அவர், நாடு முழுவதும் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகங்கள் மூலம் இது நிர்வகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.