மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் : 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-மன்னார் நிருபர்-

மன்னார் பேசாலையில் இருந்து கடல் தொழிலிற்குச் சென்ற மீனவர்கள்மீது கடற்படையினர் கடலில் வைத்து தாக்கியுள்ள நிலையில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 7 மீனவர்கள் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

பேசாலையில் இருந்து நேற்று வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் மீன் பிடிக்க கடலிற்கு புறப்படத் தயரான போது மீனவர்களின் படகுகளை கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன் போது கடற்படையினருக்கும் மீனவர்களிற்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏறபட்டுள்ளது.

இதன்போது கடற்படையினர் மீனவர் ஒருவர் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டதனால் பாதிப்படைந்த மீனவர் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்பு மீனவர்கள் கடற்படையினரிடம் மன்னிப்புக் கோரி சமரசத்தின் அடிப்படையில் தொழிலிற்குச் சென்றனர்.

இவ்வாறு தொழிலிற்குச் சென்ற மீனவர்களை நேற்று மாலை 5.30 மணியளவில் தலை மன்னார் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம் அவ்விடத்திறகு படகில் வந்த கடற்படையினர் மீனவர்களை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியதோடு படகுகளுடன் தீடைக்கு ர்கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர்.

இதனால் வேண்டுமானால் எம்மை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லுங்கள் எதற்கு யாருமே அற்ற தீடைக்கு கொண்டு செல்கின்றீர்கள்? என மீனவர்கள் கேள்வி எழுப்பிய போதும் அதனை செவிசாய்க்க மறுத்த கடறபடையினர் மீனவர்களை தீடைக்கு கொண்டு சென்றனர்.

தீடையில் இறக்கிய மீனவர்களை மீண்டும் சோதனை செய்ததோடு உடல் பரிசோதனைகளையும் மேற்கொண்ட சமயம் பேசாலையில் முரண்பாடு ஏற்பட்ட போது பிடிக்கப்பட்ட வீடியோ படத்தின் மூலம் மீனவர்களை இனம் கண்டு ஆறு மீனவ்கள் மீது தாக்குதல் நடாத்தியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் தீடையில் தாக்கப்பட்ட 6 மீனவர்களும் ஏனைய மீனவர்களின் உதவியுடன் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக மீனவர் சங்கம் மற்றும் பங்குத் தந்தை ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

எனினும் குறித்த சம்பவம் குறித்து கடற்படை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தாக்குதலில் காயமடைந்த பேசாலை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் தற்போது பேசாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.