மன்னார் நகர பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையில் பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
மன்னார் நகர சபை மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது, உணவகம் மிகவும் சுகாதாரமற்ற முறையில் இயங்கியமை உறுதிப்படுத்தப்பட்டது.
சோதனையில், ஈக்கள் மொய்க்கும் சூழலில் உணவு தயாரித்தல், அசுத்தமான இடத்தில் சமையல் மேற்கொள்ளல், கெட்டுப்போன காய்கறிகளை பயன்படுத்தல், கோழி கழிவுகளால் அசுத்தமடைந்த முட்டைகளை உணவில் சேர்த்தல், சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளை அசுத்தமான குளிர்சாதனப் பெட்டியில் ஒன்றாக சேமித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மீறல்கள் கண்டறியப்பட்டன.
மேலும், சூடான உணவுகளை தயாரிக்கவும் பரிமாறவும் அபாயகரமான பிளாஸ்டிக் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதுடன், உரிய மருத்துவச் சான்றிதழ்கள் இன்றி ஊழியர்கள் உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததும், குப்பைத் தொட்டிகள் மூடிகளின்றி அசுத்தமாக வைக்கப்பட்டிருந்ததும் அதிகாரிகளால் பதிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து, சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை பயன்படுத்த உடனடியாக தடை விதிக்கப்பட்டதுடன், அவற்றை அழிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. மேலும், குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.