மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் டயானா

பல்பொருள் அங்காடிகளுக்கு பியர் விற்பனை உரிமம் வழங்க வேண்டும், என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அரச வருவாய் அதிகரிப்பு தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே, அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் மதுபான நிலையங்களை இரவு 10 மணிவரை திறந்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு தெரிவிக்கையில்,

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மனோபாவத்தில் மாற்றம் அவசியம். கஞ்சா என்பது வெறுமனே வீதியில் பாவித்து சுற்றித்திரியும் போதைப்பொருளல்ல.

நான் அந்நியச் செலாவணியைப் பற்றி பேசுகிறேன். சில வித்தியாசமான விஷயங்களைப் பற்றி அதன் மறுபக்கத்தைப் பற்றி பேசுகிறேன்.

கஞ்சா செடியை வளர்க்க சட்டம் தேவையில்லை, கஞ்சா 6000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாசார பின்னணியை கொண்டது.

அது 2500 வருட வரலாற்றை கொண்டது இல்லை. அது ராவணன் காலத்திலிருந்தே இருந்தது.

இன்று புத்தபெருமான் இங்கு வந்திருந்தால் கூட இந்நாட்டைப் பற்றி என்ன சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை. நான் ‘இரவு வாழ்க்கை’ பற்றி பேசினேன்.’இரவு வாழ்க்கை’ என்பது விபசாரமல்ல.

அதையும் தாண்டி சில விடயங்கள் உள்ளன. பல விஷயங்கள் உள்ளன. இரவு நேரங்களில் குழந்தைகளை மகிழ்விக்கக்கூடிய நிறைய விடயங்கள் உள்ளது. அதில் ஒன்றுகூட நம் நாட்டில் இல்லை.

எல்லாமே மறைமுகமாகவும் ரகசியமாகவும் நடக்கிறது. இந்த நாட்டில் எது ஒழுக்கம்? பெண்ணை இழிவுபடுத்துவது ஒழுக்கமா?

இரவு ஒன்பது மணிக்கு மேல் மதுபானசாலைகளை மூடும் போது, ​​அரசுக்கு வரி செலுத்தாமல் பின்வாசல் வழியாக மது விற்பனை செய்கின்றனர்.

இரவு 10 மணிவரையில் மதுபானசாலைகளை திறந்து வைக்க வேண்டும்.

பல்பொருள் அங்காடிகளுக்கும் பியர் உரிமம் வழங்க வேண்டும்.

இந்த நாடு முன்னேற வேண்டுமானால் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும், என தெரிவித்தார்.