திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் ஒரு இலட்சம் மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளை எளிதாக்கும் குறிஞ்சாக்கேணி பாலத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க 10.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
பேராதனை, பதுளை செங்கலடி வீதி அபிவிருத்தி திட்டத்திலிருந்து மீதமுள்ள நிதியை இதற்காகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் அப்துல் மொஹ்சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பாலத்தின் நிர்மாணப் பணிகளின் தாமதத்தினால் மக்கள் பாதுகாப்பற்ற படகுப் பாதையை பயன்படுத்த நேரிட்டது.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்ட கோர விபத்து பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாலத்தின் கட்டுமானம் பல போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.