-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இலக்கிய கலை பெருவிழாவானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி தலைமையில் நேற்று புதன்கிழமை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
பாரம்பரிய கலை கலாசார அம்சங்கள் மறைந்து வரும் தருணத்தில் அவற்றுக்கு புத்துயிர் வழங்கும் நோக்கில் இக்கலை இலக்கிய பெருவிழா நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரவேற்பு நடனம்,சிங்கள நடனம், கதை சொல்லுதல், சிங்கள கிராமிய நடனம், சிங்கள பாடல், தமிழ் பாடல்,மேலைத்தேய நடனம் போன்ற பல கலாசார நிகழ்வுகள் மூலம் தமது திறமைகளை மாணவர்கள் மட்டுமின்றி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தும் இலக்கியப் போட்டி தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் திறந்த பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் இதன் போது மாவட்ட அரசாங்க அதிபரினாலும் மாவட்ட செயலக அதிகாரிகளினாலும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


