ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் மீது, மலையிலிருந்து உருண்டு விழுந்த பாரிய கற்பாறை மோதியதில், 35 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை களுகல பொலிஸ் காவலரணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பேருந்து பயணித்துக்கொண்டிருந்தபோது, மலை உச்சியிலிருந்து உருண்டு வந்த கற்பாறை பேருந்தின் மீது விழுந்துள்ளது.
இதன்போது, பேருந்தின் ஆசனத்தில் அமர்ந்திருந்த பயணி பலத்த காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது
விபத்தில் பேருந்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக மலைப்பகுதியிலிருந்து பாறை உருண்டு விழுந்திருக்கலாம் என பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அக்கரப்பத்தனை பகுதியைச் சேர்ந்த முத்தன் சுதர்ஷன் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










