தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் முகங்கொடுத்த ஆபத்தான பயணத்தை நினைவுகூறும் வகையில், கடந்த ஜுலை மாதம் 28ஆம் திகதி தலைமன்னாரில் ஆரம்பமான “மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணம்” நேற்று சனிக்கிழமை பிற்பகல் மாத்தளையில் நிறைவு பெற்றது.
பெருந்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக தமிழகத்தில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு மன்னாரில் தரையிறங்கிய மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து மாத்தளை வரை கால்நடையாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். இதனை நினைவுகூரும் வகையில், மாண்புமிகு மலையகத்திற்கான கூட்டிணைவு, சிவில் அமைப்பு என்பன இணைந்து மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நடைபயணம் 11 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டது.
மலையக வரலாறு, போராட்டம் மற்றும் பங்களிப்பினை ஏற்று அவற்றை அங்கீகரித்தல்.
ஏனைய பிரதான சமூகங்களுக்கு இணையான ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் ஒரு பகுதி மக்களாக அங்கீகரித்தல்.
தேசிய சராசரிகளுடன் சமநிலையை எட்டுவதற்காக விசேடமாக மலையக சமூகத்தை இலக்கு வைத்து விசேட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான உறுதியான நடவடிக்கை.
வாழ்விற்கான ஓய்வூதியம், கண்ணியமான வேலை, தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம்.
வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்காக, பாதுகாப்பான உரிமைக் காலத்துடனான காணி உரிமை.
பெருந்தோட்டங்களிலுள்ள மனிதக் குடியேற்றங்களை புதிய கிராமங்களாக நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட 11 கோரிக்கைகள் இந்த நடை பயணத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நடைப்பயணம் நாலந்த பகுதியில் இருந்து நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து மாத்தளை வந்தடைந்ததுடன், தமிழ் முற்போக்கு கூட்டணியினால் நுவரெலியா முதல் தலவாக்கலை வரையிலும் ஹட்டனில் இருந்து தலவாக்கலை வரையிலும் நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நடைபவனியை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் இணைத்தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோரின் தலைமையில் ஹட்டனில் இருந்து தலவாக்கலை வரை நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
அதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன், மயில்வாகனம் உதயகுமார் மற்றும் வேலுகுமார் ஆகியோர் தலைமையில் நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி நடைபவனி முன்னெடுக்கப்பட்டது.
பேரணியின் நிறைவில் உரையாற்றும் போது மலையக மக்களின் பிரச்சினைகளை ஒரே பேச்சுவார்த்தையால் மாத்திரம் தீர்க்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும், மலையக மக்களுக்கான உரிமைகளை விரைவாக வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரமும் தெரிவித்தனர்.
இதேவேளை, மலையக மக்களின் வாழ்வாதார வசதிகளை பூர்த்திசெய்யுமாறு அரசாங்கத்தை கோருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், நாடளாவிய ரீதியில் மலையக மக்களுக்காக நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பதுளை மாவட்ட மக்களும் பிரார்த்தனைகளுடன் இணைந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.







