மறு அறிவித்தல் வரை கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அத்துடன், இன்று பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறவிருந்த கோப் குழு கூட்டமும் பிற்போடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார செயற்பட்டிருந்தார் என எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவின் மகனும் கோப் குழு கூட்டத்தின் போது, பங்கேற்றிருந்தமை தொடர்பில், பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
குறித்த சம்பவம் தொடர்பில், விசாரணை நடத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அத்துடன், கோப் குழுவின் தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் பண்டாரவை நீக்கி, அதற்கு பொருத்தமான வேறு ஒருவரை நியமிக்குமாறு இலங்கை கணக்காய்வு சேவைகள் சங்கம் சபாநாயகரிடம் கடிதம் மூலம் கோரியிருந்தது.
இந்தநிலையில், மறு அறிவித்தல் வரை கோப் குழு கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.